அம்பிகை காவிரிக் கரையில் மணல் வடிவில் லிங்கம் அமைத்து வழிபட்டார். அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் வெள்ளப்பெருக்கு ஏற்படச் செய்ய அம்பிகை சுவாமியை தழுவிக் கொண்டதால் இத்தலம் 'சக்திமுற்றம்' என்று அழைக்கப்படுகிறது. அம்பாள் சுவாமியைத் தழுவி முத்தமிட்டதால் 'சக்திமுத்தம்' எனும் பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
மூலவர் 'சிவக்கொழுந்தீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில் காட்சி தருகின்றார். சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி அளித்ததாகவும், அதனால் இப்பெயர் பெற்றதாகவும் கூறுவர். அம்பிகை 'பெரியநாயகி' என்னும் திருநாமத்துடன் காட்சித் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் தரிசனம் தருகின்றனர். பிரகாரத்தில் நிதிநிறை கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், அகத்தியர், அவர் பூஜை செய்த திரிலிங்கம், கஜலட்சுமி மற்றும் காசி விஸ்வநாதர் சன்னதிகள் உள்ளன. சிவகாமி உடனுறை நடராஜப் பெருமானும் அருளுகின்றார்.
இக்கோயிலில் உள்ள உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால் நல்ல வாக்குசித்தம் உண்டாகும் என்பது பெரியோர்கள் கூற்று.
பிரகாரத்தில் அம்பிகை சிவனைத் தழுவிக் கொண்டிருக்கும் சன்னதி உள்ளது. இங்கு வந்து வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது நம்பிக்கை.
சிவபெருமானது திருவடி தீட்சை கிடைக்க வேண்டி அப்பர் சுவாமியிடம் விண்ணப்பம் செய்த தலம். அப்பரின் வேண்டுதலை அருகிலுள்ள திருநல்லூர் தலத்தில் சிவபெருமான் நிறைவேற்றினார்.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு அடியார்களுடன் வந்தபோது வெயில் அதிகமாக இருந்ததால், அவருக்கு முத்துப்பந்தல் அமைத்து அழைத்து வருக என்று சிவபெருமான் கட்டளையிட்ட சிறப்புடைய தலம். இக்கோயிலிருந்து சம்பந்தர் பட்டீஸ்வரம் சென்று வழிபட்டார். ஆனி முதல் தேதியன்று முத்துப்பந்தல் திருவிழா நடைபெறுகிறது.
இக்கோயிலின் தீர்த்தம் சூல தீர்த்தம். இது சூரிய புஷ்கரணி என்றும் அழைக்கப்படும். அருகில் உள்ள அரிச்சந்திரபுரம் என்னும் ஊரில் உள்ள பாற்குளத்தில் ரதசப்தமி அன்று தீர்த்தவாரி விழா நடைபெறும்.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|